திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் தொழிற்சாலை மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு அங்குள்ள கூட்டுறவு வங்கி மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 43 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால், கொள்ளை அடித்த மர்ம நபர்களின் உருவம் தெளிவாக தெரியவில்லை. இது சம்பந்தமாக பெல் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்ததோடு, அந்த வங்கியில் வேலை பார்த்து வருபவர்கள் மற்றும் சந்தேகப்படுபவர்களை தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இந்த கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதிலும் போதிய முன்னேற்றம் இல்லாததால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை நவீன உதவியுடன் மீண்டும் பார்வையிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த காட்சிகளை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தால் 96598 83888 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு சிபிசிஐடி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.