Rock Fort Times
Online News

மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்…! திருச்சியில் முத்தரசன் பேட்டி !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. அதனை தடுக்க மத்திய அரசோ, அந்த மாநில அரசாங்கமோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து மக்களை பிளவுபடுத்த பா.ஜ.க.அரசு முயற்சித்து வருகிறது. அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி மீது விரைந்து பாய்ந்த அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக குட்கா வழக்கில் அனைத்து ஆதாரங்கள் இருந்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆளுநரும் நடவடிக்கை எடுக்கவில்லை, அமலாக்கத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத்துறை பாகுபாடாக செயல்பட கூடாது. பா.ஜ.க ஆட்சி இனியும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இருக்காது. அரசியலமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்படும். எனவே தான் ஜனநாயகத்தை காக்கும் வகையில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளோம். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் விவாதிக்க முன்வரவில்லை. எதிர்க்கட்சிகள் கூச்சல்-குழப்பம் செய்யவில்லை. பிரதமர் தான் நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். மணிப்பூரில், ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப் படுத்த வேண்டும். நாளை இந்தியா முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெறும். மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். டெல்டா பாசன விவசாயத்திற்காக கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் தமிழக அரசு அனுமதியின்றி அணை கட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். மணிப்பூர் குறித்து பேசுபவர்கள் வேங்கைவயல் சம்பவம் பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை என அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தினோம் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்