Rock Fort Times
Online News

முக்கொம்பு கதவணை சீரமைப்புப் பணிகளில் தீவிரம்… அமைச்சர் ஆனந்த் ஆய்வு..!

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று (நவ.12) முக்கொம்பு மேலணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2022 ம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை பலத்த சேதமடைந்தது. இதனைச் சீரமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது சேதமடைந்த காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டு, தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், இன்னும் 15 நாட்களுக்குள் உரிய அரசாணையைப் பெற்று, புனரமைப்புப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காவிரி ஆற்றின் நீர்மேலாண்மை, அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கதவணை புனரமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்