மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (12-08-2024) வெளியிடப்பட்டது. அதில், ஒட்டுமொத்த செயல்பாட்டுப் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 6-வது ஆண்டாக இக்கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்து வருகிறது. பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2-ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3-வது இடத்தையும், டில்லி ஐஐடி 4-ம் இடத்தையும் பிடித்துள்ளன. பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டில்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன. மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டில்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது.
Comments are closed.