கைதிகள் தப்பி ஓட்டம்: ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை… * தேனியில் சிறைத்துறை டி.ஜி.பி நேரில் ஆய்வு!
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியுள்ள பெரும் பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தப்பியவர்கள் வேறு மாவட்டங்களுக்குத் தப்பியோடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தப்பியோடிய கைதிகளின் புகைப்படங்கள் அனைத்து முக்கிய காவல் நிலையங்களுக்கும் மற்றும் போக்குவரத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதோடு, சந்தேகத்திற்கு இடமான நபர்களைத் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனியில் சிறைத்துறை டி.ஜி.பி நேரில் ஆய்வு :
சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய பெரும் பரபரப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தேனி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கைதிகள் தப்பியோடிய சூழ்நிலை குறித்தும், பாதுகாப்புப் பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவத்தில் தப்பிய 17 பேரில் இதுவரை 4 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள 13 பேரைக் கூண்டோடு பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 கைதிகள் மட்டுமே அடைப்பதற்கு வசதி உள்ள இந்தச் சிறையில் விதிமுறைகளை மீறி 334 கைதிகள்
அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கண்காணிக்க வெறும் 4 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments are closed.