தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் இரவு தமிழக ஆளுநர் மாளிகையில் தங்கினார்.இன்று (20-01-2024) சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் ஸ்ரீரங்கம் வருகை தந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் வழியாக தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுரத்திற்கு வந்தார். அவருக்கு வழியெங்கும் பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடிக்கு ஸ்ரீரங்கம் கோயில் தலைமை பட்டர் சுந்தர்பட்டர் தலைமையில் தங்கக் குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, கோபுர வாசல் வழியாக உள்ளே சென்ற பிரதமர், கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தார். அப்போது யானை, பிரதமர் மோடியை ஆசீர்வதித்தது. பின்னர், கருடாழ்வார், மூலவர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். மேலும் தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தைப் பாடினர். அதை மோடி சிறிது நேரம் அமர்ந்து கேட்டார்.அதனுடன் அங்கு நடைபெற்ற கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். பிரதமர் மோடி திருச்சி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் 2.30 மணி வரை ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.