Rock Fort Times
Online News

174 பயணிகளை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சாருக்கு உயரிய விருது: குஜராத் அரசு அறிவிப்பு…!

நடுவானில் தனது உயிரை பணயம் வைத்து 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, ‘விசிஸ்ட் குஜராத் கரிமா விருது’ வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேலின் டெவ் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் ‘ஃப்ளைதுபாய்’ விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்டு சென்றது.
நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும், விமானத்தின் கட்டுப்பாட்டை கீழ் நோக்கி இயங்கும் வகையில், துணை விமானி மாற்றினார். இதனால் 36,000 அடிக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானம், 14,000 அடிக்கு கீழ் சென்றது. இதனால் பயத்தில் விமானிகள் அலறினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி ஸ்மித் மச்சார், பிற ஊழியர்களின் உதவியுடன் தாறுமாறாக பறந்து கொண்டிருந்த விமானத்தை சமநிலைப்படுத்தி, சவுதி அரேபியா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். பின்னர், துணை விமானியை சவுதி அரேபிய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தனது உயிரையும் துச்சமாக எண்ணி, தன்னை நம்பி வந்த 174 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், குஜராத் வம்சாவளியை சேர்ந்த ஸ்மித் மச்சாருக்கு ‘விசிஸ்ட் குஜராத் கரிமா விருது’ (Vishisht Gujarat Garima Award) வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். இது, அசாத்திய துணிச்சல் மற்றும் வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் குஜராத் அரசின் உயரிய விருது ஆகும். இது தவிர, அவருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியையும் குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு இன்று உலகமே தலை வணங்குகிறது. அவரது உடல் முழுவதும் ரத்தத்தில் தொய்ந்திருந்தாலும், தனது துணிச்சலால் 174 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
குஜராத்தின் வீர மகன் தனது தாய் மாநிலத்துக்கு ஈடு இணையற்ற பெருமையை தேடி தந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்