Rock Fort Times
Online News

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப சாவு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர். அதன்படி சென்னையிலிருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்தி ஏற்பட்டது.

உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.உடனடியாக சுதாரித்த உறவினர்கள் ரயிலின் அபாய சங்கலியை படித்து இழுத்தனர். பின்பு கஸ்தூரி விழுந்த இடம் தேடி சென்றனர். ஆனால் அங்கு கஸ்தூரியை காணவில்லை.பின்பு விருத்தாச்சலம் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் எடுத்துக்கூறினர். உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற போலீசார் சுற்றி தேடியபோது, உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரது உடல் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இறந்து கிடந்த கர்பிணிப்பெண் கஸ்தூரியின் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கண்போரை கண்கலங்க செய்தது.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்