Rock Fort Times
Online News

பிரணவ் ஜுவல்லரி ரூ. 100 கோடி மோசடி- நடிகர் பிரகாஷ் ராஜுக்கு தொடர்பில்லை என அறிவிப்பு…

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை மிகக்குறுகிய காலத்திலேயே மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. இதன் இயக்குநர்களாக திருச்சியைச் சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வந்தனர். எங்கள் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும்2 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும், அப்படி இல்லை என்றால் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்க நகைகளை 10 மாதங்கள் கழித்துப் பெறலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதுமட்டுமின்றி 11 மாதம் சீட்டு கட்டினால் 12வது மாதத் தவணை இலவசம் என்றும் அறிவித்தனர். இதை நம்பி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய நிலையில், கடந்த மாதம் பிரணவ் ஜுவல்லர்ஸ் அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டது. அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகினர். ரூ.100 கோடி அளவுக்கு நடந்த இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், கடந்த அக்டோபர் 19-ம் தேதி பிரணவ் ஜுவல்லர்ஸுக்குச் சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர். ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இந்த நகைக்கடை மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ் மற்றும் கார்த்திகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜ், மதுரை நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்தார். அவரது மனைவி கார்த்திகாவும் நேற்று ( 14.12.2023 ) கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜை விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. மதன் செல்வராஜிடம் நடத்திய விசாரணையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், மோசடிக்கும் எந்தவிதமான தொடர்பு இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து பிரகாஷ்ராஜை விசாரிக்கும் முடிவை போலீஸார் கைவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்