அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்டனில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-வது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கடைசி உலகக் கோப்பைப் பயணத்தை நிறைவு செய்தார்.
போட்டியின் இரண்டாவது பாதி கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ அடித்த கோல் ஆட்டத்தின் ஒரே கோலாக அமைந்தது. இதன் மூலம் ஸ்பெயின் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. போட்டி முடிந்ததும் டல்லாஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி கைதட்டிய ரொனால்டோ, கண்கலங்கியபடி மைதானத்தை விட்டு வெளியேறினார். 41 வயதான ரொனால்டோ, உலகக் கோப்பை வரலாற்றில் 27 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் பட்டியலில் 30 போட்டிகளுடன் லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார். எனினும், தனது புகழ்மிகு கால்பந்து வாழ்க்கையில் உலகக் கோப்பை மட்டுமே அவரால் வெல்ல முடியாத கோப்பையாகவே இருந்து வந்தது. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, “இப்படி உலகக் கோப்பையை விட்டு வெளியேறுவது வேதனையாக இருக்கிறது. ஆனால் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். எனது மனசாட்சி சுத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கை. இது எனது கடைசி உலகக் கோப்பை என்பது உண்மை. ஆனால், தேசிய அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இப்போது எதையும் சொல்ல விரும்பவில்லை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு, அமைதியாக யோசித்த பிறகே முடிவு எடுப்பேன்,” என்று தெரிவித்தார். சர்வதேச கால்பந்தில் 146 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரராகவும், 233 போட்டிகளில் விளையாடிய வீரராகவும் சாதனை படைத்துள்ள ரொனால்டோ, போர்ச்சுகலுக்காக 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டு முறை யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை பட்டம் மட்டும் அவருக்கு எட்டாத கனவாகவே இருந்து வந்தது. நான் போர்ச்சுகலுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளேன். மூன்று முக்கிய பட்டங்களை வென்றுள்ளேன். 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வெற்றி எனக்குப் பொறுத்தவரை உலகக் கோப்பை வெற்றிக்கு இணையானது,” என்று ரொனால்டோ கூறினார்.

Comments are closed.