என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்களா? அமைச்சர் கீர்த்தனா கேள்வி?
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள வகுப்பறையில் ஆய்வு செய்து மாணவிகளின் ஆங்கிலத் திறன் குறித்து அவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, அவர் கூறிய கருத்து சர்ச்சையாகியது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா நேற்று விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில், இன்று( ஜூலை 7) அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது;
இன்று சிலர், “அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்” என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி தான். தமிழ் வழிக் கல்வியில் படித்தவள் தான். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல… என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள். கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம். பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள். இன்னொரு கேள்வி… இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்? அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது. ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.