திருச்சி சிட்டி பகுதியில் போதை ஊசி, கஞ்சா, லாட்டரி விற்ற 2 பெண்கள் உள்பட 15 பேரை தட்டி தூக்கியது காவல்துறை…!
திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் வாத்துக்கார தெரு பொதுக் கழிப்பிடம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றதாக உறையூர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன், சந்தோஷ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். உறையூர் பாண்டமங்கலம் அரச மரத்தடி பகுதியில் மது பாட்டில்களை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்றதாக கள்ள சந்தையில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல காந்தி மார்க்கெட் சப்- ஜெயில் ரோடு ஜெயில்பேட்டை பகுதியில் லாட்டரி விற்றதாக செல்வம் என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.
மேலும், காந்தி மார்க்கெட் பாய்கடை சந்து எடத்தெரு ரோடு பொதுக்கழிப்பிடம் பகுதியில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள், ஊசிகள் வைத்திருந்ததாக தாராநல்லூரைச் சேர்ந்த ஹரிபிரசாத், சந்துரு, மர்டர் மணி ஆகிய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மாத்திரைகள், சிரஞ்சுகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed.