தமிழக கல்வித் துறையில் வழக்கமாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கு மட்டும் தான் பொது தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால், சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிக தேர்ச்சி காண்பிப்பதற்காக பிளஸ்-2 வகுப்புக்கு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஆண்டுதோறும் பிளஸ்-1 வகுப்புக்கும் ஆண்டுதோறும் பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பிளஸ் -1 பொதுத் தேர்வு, மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள், 4,945 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில் 8.16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 மையங்களில் ஏப்ரல் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை நாளை (மே 14) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.