Rock Fort Times
Online News

திருச்சி மத்திய சிறை அருகே பெட்ரோல் பங்க்- ஆண் கைதிகளே கையாளுகிறார்கள்…!

குற்றம் செய்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுவது அவரை தண்டிப்பதற்காக அல்ல, அந்தத் தவறை அவர் மீண்டும் செய்யாமல் இருப்பதற்காகவே என்று சொல்லுகிறது சட்டம். இருந்தாலும் சிறைவாசிகள் உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வு அடையாதவாறு தமிழக சிறைத்துறை பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் கைதிகளே கையாளும் பெட்ரோல் பங்க் விற்பனை நிலையம். தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் இது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறை வளாகம் முன்பு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பெண் கைதிகள் கையாளும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து திருச்சி ஆண்கள் மத்திய சிறை வளாகம் அருகே பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது . பூமி பூஜையில் திருச்சி மண்டல சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திருச்சி சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி, இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் கென்னடி உள்ளிட்ட சிறை அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திருச்சி மேலாளர் கென்னடி கூறுகையில், சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறை வளாக நுழைவாயில் அருகே உள்ள 2800 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமானங்களுக்கு சுமார் 300 சதுரஅடி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.1.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 20 ஆயிரம் லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள டேங்க்குகள் வைக்கப்பட உள்ளது. மேலும், இந்த இடத்தில் எதிர்காலத்தில் சிஎன்ஜி கேஸ் மையம் அமைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவுற்று அடுத்த ஆண்டு இந்த பெட்ரோல் பங்க் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார். சிறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், சிறை கைதிகள் 3 வேளை சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்