Rock Fort Times
Online News

திருச்சியில் தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி: வைரலாகும் வீடியோ…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம்குளத்தூர், சந்தப்பேட்டை பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் ‘அயனிங்’ கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு இந்த மாத மின் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் தொகையும் சேர்ந்து உயர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவரம் அறிய வண்ணாங்கோவில் மின்வாரிய அலுவலக அதிகாரிகளை முகமது இப்ராஹிம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு மின்வாரியத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் ரூ. 7000 மின் கட்டணத்துடன் டெபாசிட் தொகையான ரூ. 21,000 சேர்த்தே கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், டெபாசிட் தொகை இல்லாமல் மின் கட்டணத்தை மட்டும் செலுத்துவதற்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முகமது இப்ராஹிம், அந்த அதிகாரியிடம் பேசி ரூ. 6,800 லஞ்சமாக வழங்கியுள்ளார். அந்த அதிகாரி லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்களிடம் எந்த அரசு அதிகாரிகளும் லஞ்சம் வாங்க கூடாது என்பது தமிழக அரசின் கண்டிப்பான உத்தரவாக உள்ளது. ஆனால், அதையும் மீறி தொழிலாளியிடம் மின்வாரிய அதிகாரி லஞ்சம் வாங்கிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்