Rock Fort Times
Online News

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு: முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, வாக்காளர்கள் தினேஷ் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர். திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்தத் தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் இன்று(25-08-2026) காலை மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு வாரங்கள் அவகாசம் அளிக்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்