Rock Fort Times
Online News

பெரியார், அண்ணா பிறந்தநாள் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பா?* தமிழக காவல்துறை விளக்கம்…!

பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக தகவல்கள் வெளியாகின. இதேபோல, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி குடியாத்தத்தில் நடைபெற இருந்த பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால், இரு இடங்களிலும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக ஈரோடு காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று 14.09.2026-ம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த மனு அளித்திருந்தனர். “ஈரோட்டில், காவல் துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல, அண்ணா பிறந்த நாளையொட்டி குடியாத்தத்தில் 15-ம் தேதி நடத்தவிருந்த திமுக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக உதயநிதி கூறிய நிலையில்,காலை 9 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டதால் திமுகவுக்கு அப்போதைய நேரத்தில் அனுமதி வழங்க இயலாத நிலை ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்