இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது பதவி காலம் முடியும் தருவாயில் உள்ளதால் நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில் இன்று(16-03-2024) பிற்பகல் 3 மணி அளவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று புதுடெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் ஒரு கோடியே 50 லட்சம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 55 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது கண்டறியப்பட்டால் அதுகுறித்து புகார் அளிக்க சி.விஜில் என்ற தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது, அந்த செயலில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றார்.
பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றார் அதேபோல தமிழ்நாட்டில் உள்ள விளவங்கோடு உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார். நாடாளுமன்றத் , தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதி நடக்கிறது. வேட்பு மனு திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். புதுச்சேரியிலும் இதே தேதியில் தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Comments are closed, but trackbacks and pingbacks are open.