ஒடிசாவில் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டன. பெங்களூரு- ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் விபத்தில் சிக்கியதில் 17 பெட்டிகள் தடம் புரண்டன. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகளும், பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக இந்த ரயில் விபத்தில் 70 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. 15 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நீடித்தன. ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த கோர ரயில் விபத்தில் மொத்தம் 238 பேர் பலியாகி விட்டதாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சிக்கி உள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒடிசா விரைந்துள்ளது. அவர்கள் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளுக்கு உதவி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் ஒன்று சென்னைக்கு கிளம்பி உள்ளதாகவும், அந்த ரயில் நாளை( ஜூன் 4 ) காலை 9 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று(3-6-2023) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இதன் காரணமாக நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் ஒடிசா ரயில் விபத்தை ஒட்டி இன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.