திருமணம் ஆகாமல் கர்ப்பம்: பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி, காதலன் கைது …!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியபுரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த
மூதாட்டி ஒருவர் அழுகுரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு வினோதா என்ற நர்சிங் கல்லூரி மாணவியும், அவரது தாயாரும் நின்று கொண்டிருந்தனர். . அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த மூதாட்டி, இருவரிடமும் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். உண்மையைச் சொல்லுங்கள் என்று அந்த மூதாட்டி அதட்டி கேட்டபோது, பிறந்து சில மணி நேரமே ஆன சிசுவை இருவரும் உயிருடன் மண்ணில் புதைத்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, புதைத்த அந்த சிசுவை தோண்டி எடுத்தபோது அந்த சிசு உயிருடன் இருந்துள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பனையப்பட்டி போலீசார் வினோதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேட்டுச்சாலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருவதும், தனது காதலன் சிலம்பரசன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் கர்ப்பமாகி குழந்தை பெற்றதாகவும், திருமணம் ஆகாத நிலையில் குழந்தை பெற்றதால் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள் என்று எண்ணி பிறந்த குழந்தையை தனது வீட்டின் முன்பே புதைத்ததும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோதாவையும், அவரது காதலன் சிலம்பரசனையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண் சிசுவானது மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Comments are closed.