நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக( எஸ்பி) சுந்தர வடிவேல் பணியாற்றி வருகிறார். இவரது வாகனம் கோவை செல்வதற்காக ஊட்டியில் இருந்து புறப்பட்டது. இந்த வாகனத்தில் எஸ்பி வரவில்லை. அவரது உறவினர்கள் வந்ததாக தெரிகிறது. மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள கல்லார் தூரிப் பாலம் அருகே, எஸ்.பி.வாகனம் சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும், அந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்த தகவலின்பேரில், மேட்டுப்பாளையம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தாலும், இரு சக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. எஸ்பி வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பின்னர், விபத்தில் காயமடைந்த 2 வாலிபர்களையும் போலீசார் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், படுகாயமடைந்த இளைஞர்கள் உதகையை சேர்ந்த அல்தாப் (18) மற்றும் ஜூனைத் (18) என்பதும், காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தை காவலர் ஒருவர் ஒட்டி வந்ததும் தெரியவந்தது. இதனிடையே படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜூனைத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.