விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல், தொழிலாளர்கள் இன்று (09-07-2024) பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மருந்துகள் உராய்வின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ மள, மளவென அந்த அறை முழுவதும் பரவி பட்டாசுகள் டமார், டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில், தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு அபய குரல் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த வெடி விபத்தில்
தீயில் கருகி மாரியப்பன், முத்துவேல் ஆகிய 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமுற்று, சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு அடிக்கடி இதுபோல வெடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாவது தொடர் கதையாக உள்ளது. ஆகவே, பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
1
of 840
Comments are closed.