திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சிறந்த பணியை பாராட்டி மத்திய அரசின் தேசிய அளவிலான சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை செயல்பட்டு வருகிறது. உணவுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைகளில் கலப்படம் செய்வதை தடுப்பது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது, ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைப்பதை தடுப்பது, கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்வதை தடுப்பது, பாட்டில்கள் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர், சமையல் எண்ணை ஆகிவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பல கடைகள், விற்பனை மையங்கள், ஆலைகள் உள்ளிட்டவற்றை பூட்டி சீல் வைத்தும், தாற்காலிகமாக உரிமங்களை தடைசெய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரகம் சார்பில், தேசிய அளவில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மாவட்டங்களை தேர்வு செய்தது. இதில் திருச்சி மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டு சிறந்த செயல்பாட்டுக்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்புத் தினமான ஜூன் 7 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சான்றை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் எல் மாண்டவியா மற்றும் மத்திய அமைச்சர் எஸ்பி. சிங் ஆகியோர், திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபுவிடம் வழங்கினர். இதனையடுத்து சான்றை பெற்று வந்த நியமன் அலுவலர், அந்த சான்றை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமாா் ஐஏஎஸ்சிடம் நேற்று ( 09.06.2023 ) மாலை சமர்பித்து வாழ்த்து பெற்றார்.
ஆய்வுகள் மூலம் மாதிரிகள் சேகரிப்பது, உரிமங்கள் வழங்குவது, உணவு வணிகர்களுக்கு சான்றுகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றது மற்றும் துறைரீதியான சிறந்த பணிகளை கருத்தில் கொண்டு இந்த தேசிய சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கு காரணமான உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை குழுவினர், மற்றும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நன்றி என ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.