Rock Fort Times
Online News

சினிமாவில் வருவது போல சம்பவம்: வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் , 5 பவுன் நகை சுருட்டல்…!

திருச்சி மாவட்டம் துறையூர் சௌடாம்பிகா தெருவில் வசிப்பவர் முத்துவீரன். இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு இன்று(17-06-2024) அதிகாலை மாஸ்க் அணிந்துகொண்டு  5 நபர்கள் வந்து முத்துவீரனிடம், நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள், தங்களது வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர் .  இதை நம்பிய முத்துவீரன் அவர்களை வீட்டில் உள்ள அனைத்து பீரோக்களையும் திறந்து சோதனை செய்வதற்கு  அனுமதித்துள்ளார்.  அந்த மர்ம நபர்கள் சோதனை இடுவது போல் நடித்து பீரோவில் இருந்த  ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகைகளை எடுத்துக்  கொண்டனர். விசாரணை முடிந்த பிறகு தங்களிடம் பணம் மற்றும் நகைகளை திருப்பி ஒப்படைத்து விடுவதாக கூறி சென்றுள்ளனர்.  ஆனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த முத்துவீரன் இதுகுறித்து துறையூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது வந்தவர்கள் உண்மையான வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை என்பது தெரிய வந்தது .  அதனைத் தொடர்ந்து  முசிறி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.  மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். “இன்கம் டேக்ஸ்” அதிகாரி என்று கூறி சினிமாவில் தான் இது போன்ற காட்சிகள் வரும்.  ஆனால் துறையூர் பகுதியில் நிஜத்தில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்