2021 – 2026 வரை திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, திருச்சி மாவட்டத்திலேயே மண்ணச்சநல்லூர் தொகுதி திமுகவினர் தான் மிகவும் செழிப்புடன் இருந்தனர். அந்த அளவிற்கு கடந்த ஐந்தாண்டுகளில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அடுத்தபடியாக காசு பணத்தை வாரி இறைத்து கட்சியினரை குளுகுளுவென வைத்திருந்தார் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன். தீபாவளி, பொங்கல், தேர், திருவிழா என தொகுதிக்குள் எந்த நல்லது – கெட்டது நடந்தாலும் எம்.எல்.ஏ கதிரவன் பெயர் போட்டு காந்தி தாத்தாக்கள் சிரிக்கும் தனி “கவர்” ஒவ்வொரு நிர்வாகிகள் வீட்டிற்கும் சென்று சேர்ந்திருக்கும். ஆனால், இதே தொகுதி உடன்பிறப்புகள் தற்போது தங்களை யாரும் கவனிப்பதில்லை என சோக கீதம் இசைக்கின்றனர். பட்டாசு வெடித்து, இனிப்புடன் கொண்டாட வேண்டிய தீபாவளி நேரத்தில் ஏன் இந்த இன்னல் என விசாரித்தோம். அப்போது தொகுதிக்குட்பட்ட சில விபரப்புள்ளிகள் நம்மிடம் தெரிவித்ததாவது.,
மண்ணச்சநல்லூரில் கடந்த ஐந்தாண்டுகள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக கதிரவன் இருந்தவரை, திமுக கரை வேஷ்டி கட்டிய கழக உடன்பிறப்புகள் அனைவரும் ராஜா வீட்டு கன்னுக்குட்டி போல செழிப்பாக இருந்தோம். தீபாவளி, பொங்கல் என எந்த விசேஷம் வந்தாலும், எம்.எல்.ஏவுக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் கட்டைப்பை நிரம்பும் அளவுக்கு கட்சியினருக்கு வலுவான கவனிப்பு நடக்கும். ஆனால், தற்போது அந்த நடைமுறை இல்லை. 2026 தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என கனவு கண்டார் கதிரவன். அதற்காக 60. ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என மண்ணச்சநல்லூர் தொகுதிக்குள் வாக்கு கேட்டு செல்லும் இடங்களிலெல்லாம் சூளுரைத்து பிரச்சாரம் செய்தார். தொகுதிக்குள் இருக்கும் திமுக வாக்கு வங்கி, தனக்கான தனிப்பட்ட செல்வாக்கு, தான் செயல்படுத்தி வரும் தொகுதி மக்களுக்கான இலவச மருத்துவம் ஆகியவை இந்த வெற்றி இலக்கை இலகுவாக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பொதுத்தேர்தல் முடிவுகள் நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றியது.
வாக்கு எண்ணிக்கையின்போது பல சுற்றுகளில் கதிரவன் பின்னடைவையே சந்தித்தார். இருந்தும் நல்வாய்ப்பாக சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இருந்தாலும் தமிழகத்தில் மையமிட்ட விசில் புரட்சியால் திமுக எதிர்கட்சியான அதிர்ச்சி ஒருபுறம், தொகுதி நிர்வாகிகளை பலமாக கவனித்தும் தனி மெஜாரிட்டியில் கரை சேரமுடியாத கவலை மறுபுறம். எம்.எல்.ஏவாக ஜெயித்த பிறகும் கூட கதிரவன் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை. கூடவே இருந்து கதிரவனுக்கு எதிராக உள்ளடி வேலையில் பலர் இறங்கினர். இது எம்.எல்.ஏவுக்கு தெரியவந்தது. இதனால் பயங்கர அப்செட்டில் இருந்தார். அதனால் சில மாதங்கள் கட்சியினரை சந்திப்பதையே தவிர்த்து வந்த அவர், சமீப காலமாகதான் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறார். ஆகவே முன்பு போல கட்சியினரை குஷிப்படுத்த அவர் தயாராக இல்லை என்கின்றனர். இன்னொரு தரப்போ., அதெல்லாம் இல்லை. எப்போதும் போல எம்.எல்.ஏ கதிரவன் கட்சியினரோடு கலந்தாலோசித்து கொண்டுதான் இருக்கிறார். இந்த தீபாவளிக்கு கூட மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் மத்திய, வடக்கு, கிழக்கு, முசிறி மேற்கு, கிழக்கு என 5 ஒன்றிய திமுக செயலாளர்களுக்கும் தலா 1 “லகரங்கள்” செட்டில் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கான ஸ்பெஷல் கவனிப்புகள் வருகிற வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெறும் என்கின்றனர்.

Comments are closed.