Rock Fort Times
Online News

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.36 லட்சம் முறைகேடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேர் மீது வழக்கு…!

தென் சென்னை வடமேற்கு அதிமுக மாவட்ட செயலாளராக இருப்பவர் ப.சத்தியநாராயணன் (எ) சத்யா. இவர், 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை தியாகராயநகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது அவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் பல லட்சம் முறைகேடு செய்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்தது. இதில், மேற்கு மாம்பலம் காசிகுளம் தெருவில் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டதும், அதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சத்து 23 ஆயிரத்து 368 ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அங்கு கட்டிடம் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள், போலி ரசீதுகள் அரசிடம் வழங்கப்பட்டு நிதி பெறப்பட்டது தெரிய வந்தது. ஆனால், அங்கு கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. புதிதாக கட்டிடம் கட்டியதாக அந்தப் பகுதியில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த ஒரு ரேஷன் கடையை காட்டி பணம் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோல, கோடம்பாக்கம் பிருந்தாவன் தெருவில் இரு இடங்களிலும், கோடம்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் பல்வேறு தேவைகளுக்கான கட்டிடங்கள் உயர் தரத்தில் கட்டுவதாக தொகுதி மேம்பாட்டு நிதி பெறப்பட்ட நிலையில், தரம் குறைவாக அந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதும், இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், அவருக்கு அப்போது உடந்தையாக செயல்பட்ட சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல உதவிப் பொறியாளர்கள் வி.இளங்கோவன், எம்.மணிராஜா, ஜி.ராதாகிருஷ்ணன், நிர்வாகப் பொறியாளர் வி.பெரியசாமி, முன்னாள் மண்டல அலுவலர் எஸ்.நடராஜன், தனியார் நிறுவன நிர்வாகி வி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் மொத்தம் ரூ.35 லட்சத்து 68 ஆயிரத்து 426 மோசடி செய்திருப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சத்தியநாராயணன் உள்பட 7 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 7 பேரிடமும் போலீஸார் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் 2023-ல் ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்