திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று(13-03-2024) நடந்தது. துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா , விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள் . கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில், பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வர இருப்பதால் இந்த கூட்டம் சீக்கிரமாக நடைபெறுகிறது.
பணிகளை தொடங்கி விட்டால் அதன்பிறகு தேர்தல் முடிந்து தொடர ஏற்பாடு செய்யப்படும் என்றார். அதன்பிறகு கவுன்சிலர்கள் பேசியதாவது: முத்து செல்வம் (திமுக):- பூங்காக்களை பராமரிக்க லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து விட்டு அதனை பராமரிப்பவர்களிடம் இருந்து குறைந்த அளவு பணம் வசூல் செய்வது சரியாக வருமா? மேயர்:- திருச்சி மாநகரில் 300க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால் அங்கு உள்ள பொருட்கள் வீணாகி வருகிறது. முன்பெல்லாம் விளம்பரதாரர்கள் பூங்காக்களை பராமரிப்பார்கள். ஆனால் தற்பொழுது விளம்பரதாரர்கள் பூங்காக்களை பராமரிப்பது இல்லை. மாறாக தொண்டு நிறுவனங்கள் நம்மை அணுகினால் அவர்களுக்கு பூங்காக்களை பராமரிக்க ஏற்பாடு செய்து தருகிறோம். செந்தில்நாதன் (அமமுக):சொத்து வரி பாக்கிஅதிகம் வைத்துள்ளவர்களை விட்டுவிட்டு சாதாரண மக்களிடம் வரியை கட்டவில்லை என்றால் குடிநீர் இணைப்பை துண்டிப்பது என்பது சரியான செயல் இல்லை. வருங்காலத்தில் அந்தந்த வார்டு மண்டல அலுவலகம் முன்பு சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரி பாக்கி உள்ள நபர்களின் பெயர் பட்டியலை வாசலில் வைக்க வேண்டும்.
ராமதாஸ் (திமுக): எனது வார்டில் குடிநீர் சரியாக வரவில்லை.இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர்: காஜாபேட்டை மற்றும் பொன் நகர் நீர்த்தேக்க தொட்டி பகுதியில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை காலம் அதிகமாக இருக்கும் காரணத்தால் குடிநீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தும் சூழ்நிலை வந்தாலும் வரலாம். இருந்தாலும் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 இடங்களில் போர்வெல் அமைத்து தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தமிழகத்திலே திருச்சி மாநகராட்சியில் தான் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) : மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக உள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் . அதேபோல இந்த மாமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ராமதாஸ் (தி.மு.க.): எனது வார்டில், ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள 13 வீடுகளில் 9 வீடுகளுக்கு வரி கட்டிய நிலையில் மீதி வீடுகளில் பாக்கி உள்ளதற்காக குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்தார்கள்.
மேயர்: வரி சரியாக வசூலிக்காவிட்டால் மத்திய அரசு 15 வது நிதி கமிஷனில் இருந்து பணம் தர இயலாது என்று கூறுகிறார்கள். இது ஒரு வகையான மிரட்டல் தான் என்றார். இதற்கு கவுன்சிலர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய், செந்தில்நாதன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரி கட்டுவதற்கு நடப்பு மாதம் 31ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக குடிநீர் இணைப்பை துண்டிக்க புறப்படுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டத்தில் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது. அம்பிகாபதி (அதிமுக) தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையை ஏற்று நேற்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சி மாநகராட்சி பகுதியிலும் பெட்டிக்கடைகளில் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது. மேயர்: இங்கு அரசியல் பேச இடம் இல்லை என்றார். அப்போது அதிமுக கவுன்சிலருக்கு, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்பிகாபதி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து பல கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகளை முன்வைத்து பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.