சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று (மே 20) காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுகாதாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நன்கு அறிந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருங்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயரை பெற வேண்டும் என்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் சாலை வசதிகள், சாக்கடை திட்டங்கள், குடிநீர் மேம்பாட்டு பணிகள், பேருந்து வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகளாக தங்களது கடமையை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 2026-27ஆம் ஆண்டில் இதுவரை 84 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறிய அவர், 2026-27ஆம் ஆண்டில் இதுவரை 864 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “மற்ற மாநகராட்சிகளுடன் ஒப்பிடுகையில், நாய்களின் இனப்பெருக்கத்தை அதிகளவில் கட்டுப்படுத்திய மாநகராட்சியாக திருச்சி திகழ்கிறது என அவர் தெரிவித்தார்.” வெறிநாய் மற்றும் நோயுற்ற நாய்களை பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில் நான்கு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை இம்மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்து பேசினர். உறுப்பினர்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை கேட்டுக்கொண்ட மாநகர மேயர், அனைத்து பிரச்சினைகளுக்கும் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் அண்ணாதுரை, மண்டலத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, பி. ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.