நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு…!
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் 19ம்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஆனால், ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இதுதொடர்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கோர்ட் உதவியை நாடியும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. இதனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு துரை வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த அவர், நான் செத்தாலும் எங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவேன் வேறு சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தவகையில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.