கள்ளத்தனமாக மது விற்றதாக கைது செய்யப்பட்டவர் சிறையில் உயிரிழப்பு – போலீசார் அடித்ததால் தான் இறந்ததாக உறவினர்கள் சாலை மறியல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள பளூரை சேர்ந்தவர் திராவிட மணி(40). இவர் அப்பகுதியில் கள்ளத்தனமாக மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்ததாக ஜீயபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிறையில் இருந்தபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து சக கைதிகள் சிறை துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சிறைத் துறையினர் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திராவிட மணியின் உறவினர்கள் சிறையில் போலீசார் தாக்கியதால் தான் திராவிட மணி உயிரிழந்தார் எனக் கூறி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக கேட்டுக் கொண்டனர். ஆனால், திராவிட மணியின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்காமல் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.