Rock Fort Times
Online News

தஞ்சையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த வாலிபர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்தது…!

தஞ்சாவூரில் விசிக போராட்டத்தின் போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் ஒரு வாலிபர் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நேற்று (17.08.2026) காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது. ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும், ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இந்த வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் இருந்த  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரஹீம் தலையிட்டு ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபர் உடனடியாக  ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை உருவாக்காமல் தடுக்கும்  நோக்கத்திலேயே குறைந்தபட்ச பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.  சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரஹீம் கன்னத்தில் அறைந்த வாலிபர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்