முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 124-வது
பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கும், அதன் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மலர் தூவியும் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும், சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன். கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர். எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.