Rock Fort Times
Online News

கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்…* முதலமைச்சர் விஜய் இரங்கல்..!

சென்னை, கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்த வி.எஸ்.பாபு 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதன்பிறகு. கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.விலும் கண்டுகொள்ளப்படாததால் த.வெ.க.வில் இணைந்தார். 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. சார்பில் கொளத்தூர் தொகுதியில் களம் இறக்கப்பட்ட வி.எஸ்.பாபு, யாரும் எதிர்பாராத விதமாக 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வரலாறு படைத்தார். இந்தநிலையில் உடல் நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, நீண்டகால சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9ம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். விரிவான மருத்துவ மேலாண்மை மற்றும் எங்களின் பல்துறை மருத்துவக் குழுவின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 2026 நவம்பர் 19ம் தேதி மதியம் 2:24 மணிக்கு அவர் காலமானார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு. எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் இரங்கல் :

வி.எஸ்.பாபு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபு திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்