கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் பலி: ஜனாதிபதி, பிரதமர், ராகுல், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று(30-07-2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கி தவிக்கின்றனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிகிறது. அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அறிந்து மிக கவலையுற்றேன். அன்பான ஒவ்வொருவரையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். கேரளாவுக்கு வேண்டிய உதவிகளை மத்திய அரசு செய்யும். மாநில முதல்வருடன் போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பி ஆன ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள் நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டு அறிந்தேன். உயிரிழப்பு பெரும் கவலை தருகிறது. தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக அறிகிறேன். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் தேவைப்படும் உதவிகளை கேரளாவிற்கு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
Comments are closed.