கரூர் துயரச் சம்பவம்: 31 பேர் பணி நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை…! நீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கண்டிப்பு..!
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அரசுப்பணி வழங்கினார். இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த வழக்கில், அரசுப்பணிகளை கருணை அடிப்படையில் இப்படி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பணி நியமன ஆணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பரித்வாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று(14-08-2026) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிவாரணமாக வேலையை அரசு வழங்க விரும்பினால், அதில் உயர்நீதிமன்றத்திற்கு என்ன பிரச்சனை?.
இந்த விவகாரம் தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று வாதிட்டார். எதிர்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசுக்கு இதுபோன்று வேலைகளை வழங்கும் அதிகாரம் இருக்க முடியாது” என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட
நீதிபதிகள் அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பினர் விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டதோடு, பணி நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடையும் விதித்தனர்.
வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன பிரச்சனை? கூட்ட நெரிசல் ஏற்பட்டது, மக்கள் இறந்தனர். அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்றும், பண இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசு முடிவு செய்தால், அவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்று நீங்கள் எப்படி அவர்களைக் கேள்வி கேட்க முடியும்?. அந்தத் துயரச் சம்பவத்தில் குடும்பத்தின் ஒரே உறுப்பினர் இறந்துவிட்டால், அரசு அவரது மகனுக்கோ அல்லது மகளுக்கோ ஏதேனும் வேலை கொடுக்க வேண்டாமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், ”கூட்ட நெரிசலுக்குக் காரணமான கட்சியே தற்போது மாநிலத்தை ஆட்சி செய்வதால், முரண்பாடு உள்ளது” என்று குறிப்பிட்டார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் யாருக்காக ஆஜராகிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் என்று பதிலளிக்க, “இங்கே அரசியலைக் கொண்டு வராதீர்கள்,” என்று நீதிபதி சந்திரன் கண்டிப்புடன் கூறினார்.

Comments are closed.