Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு நாள் கருத்தரங்கம்…!

கவிஞர் வைரமுத்து உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திருச்சி தெற்கு மாவட்டம்   கிழக்கு மாநகர திமுக சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.  மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் வரவேற்றார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசினார்.  அப்போது அவர் பேசுகையில்,  மறைந்த முதல்வர் கருணாநிதியை தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டி வருகிறது.  தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையை செய்து முடிக்கும் முதல் வீரராக திருச்சி தெற்கு மாவட்ட வீரர்கள் செயல்படுவார்கள். வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்  என்று கூறினார்.

கவிஞர் வைரமுத்து கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில்,  அன்பில் தர்மலிங்கம் கருணாநிதிக்கு தோழன், பொய்யாமொழி ஸ்டாலினுக்கு தோழன், அன்பில் மகேஸ் அடுத்த தலைமுறையான உதயநிதிக்கு தோழன். மூன்று தலைமுறையாக சேர்ந்திருக்கும் அதிசயம் உங்கள் குடும்பத்துக்கு நிகழ்ந்திருக்கிறது.  திராவிட மாடல் என்ற இயக்கம் தொடங்கப்பட்டது ஏன்? திருடன், பிச்சைக்காரன், கொலைகாரன், விலைமகள் ஆகிய இந்த 4 பேர் இல்லாத சமுதாயம் தான் உண்மையான சமுதாயம். அந்த லட்சியத்தை எட்டினால் தான் இயக்கம் பிறந்ததற்கு அர்த்தம் உள்ளதாக கருதுகிறேன். அதற்காகவே தொடங்கப்பட்ட திராவிட மாடல் அந்த லட்சியத்தை எட்டும்.  மகாகவி பாரதி சொன்னதுபோல வயிற்றுக்கு சோறிடும் திட்டத்தை நீதிக்கட்சி, காமராஜர், கருணாநிதி ஆகியோர் தான் உருவாக்கினார்கள். 21 லட்சம் குழந்தைகள் அதிகாலை புன்னகை புரியும் வகையில் நாள் விடிகிறது என்றால் ஸ்டாலினின் காலை உணவுத் திட்டத்தாலும், அன்பில் மகேஸின் நிலையான செயல்பாடுகள் தான். வடநாட்டுத் திட்டங்களுக்கும், தென் நாட்டுத் திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது.  சாதி என்ற வேர்கள் அகற்றப்படாமல் சத்துணவுத் திட்டம் வெற்றி பெறாது. சாதி பெரிதா ? மதம் பெரிதா ? என்று பெரியாரிடம் கேட்டபோது, சாதி தான் பெரிது என்றார். நீ நினைத்தால் மதம் மாற முடியும் சாதி மாற முடியுமா என்றார்.  எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடகாசிரியர், கட்சித் தலைவர், ஆட்சித் தலைவர், குடும்பத் தலைவர், கூட்டணித் தலைவர் இந்தியாவின் தத்துவத் தலைவர் என பன்முகம் கொண்டவர் கலைஞர்.  கலைஞரை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றால் அவரது நூல்களை தலைமுறை தாண்டி கடத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவர் எழுதிய புத்தகங்களை பரிசாக கொடுங்கள்.  கலைஞரின் அறத்தை பின்பற்ற உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். காலமெல்லாம் அழைக்க வேண்டிய பெயரை வடமொழியில் அர்த்தம் தெரியாமல் வைக்காதீர்கள்’. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில்  தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் மகேந்திரன், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், ம.ம.க பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.  இந்த கருத்தரங்கில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில், திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நன்றி கூறினார்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்