Rock Fort Times
Online News

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: திருச்சியில் 72 அணிகள் பங்குபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டி….

தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் ஏற்பாடு..

தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மறைந்த மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தமிழகம் முழுவதும் ஓராண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்கூட்டங்கள், ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்டம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணனின் ஏற்பாட்டில், மின்னொழியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகரத்திற்கு உட்பட்ட 72 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டியினை கடந்த 26-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

 

இந்த போட்டியானது, 27, 28, 29 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி வாகை சூடும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ 25 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ10 ஆயிரமும், நான்காம் பரிசு ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த தொடர் நாயகன் பரிசாக ரூ.3 ஆயிரம், இறுதி போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசு ரூ.2 ஆயிரமும் அளிக்கப்படுகிறது. அதேபோல , போட்டியில் பங்குபெறும் அணிகளுக்கு நினைவு பரிசும் வழங்கப்படுகிறது.

  

மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி எண்ணத்தில் உருவாக்கப்பட்ட, மக்கள் நலத்திட்டங்கள் , குறித்து வண்ண பேனர்கள் வடிவில் பவுண்டரி எல்லைகளாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. 72 அணிகள் விளையாடும் இந்த போட்டியை திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் தொடங்கி வைக்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியை திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.

   

  

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்