Rock Fort Times
Online News

“ஜெய் பீம்” திரைப்படம் போல திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் அருகே பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்…! ( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், காணக்கிளி யநல்லூர் அருகே உள்ள பெருவளப்பூர் ஊராட்சியில் மாரியாகுளம் என்ற பகுதியில் இருளர் இன மக்கள் மலர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கரிமூட்டம் போடும் தொழிலை செய்து வருகின்றனர். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக பனை ஓலை குடிசையில் வசித்து வரும் இவர்கள் குடிநீர், மின்சாரம், உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து முறையிட்டும் எவ்வித பயனும் கிடைக்காமல் தங்களது அன்றாட வாழ்க்கையை கழித்து வருகின்றனர். பெருவளப்பூர் – நம்புக்குறிச்சிக்கு இடையே செல்லும் சாலையோரத்தில் வசித்து வரும் இவர்கள், தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் தவித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதி சேறும் -சகதியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் செல்போன் லைட் மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் குருவி கூடு போல் இருக்கும் வீட்டில் அமர்ந்து படிக்கும் அவலம் வேறு எங்கும் காண இயலாததாக இருக்கிறது. மேலும் கை குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதையும் வருங்காலத்தையும் நினைத்து மனவேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இருளர் மக்களுக்கு பட்டாவுடன் கூடிய ஒரு வீடு அதற்கு மின்சார வசதி, குடிநீர் வசதி போன்ற மனித வாழ்க்கையின் அடிப்படை தேவை மட்டுமே பல வருட கனவாக இருந்து வருகிறது.

இதுகுறித்து இப்பகுதியில் வசிக்கும் சுரேஷ் கூறுகையில், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வரும் நாங்கள் கரிமூட்டம் போட்டு தொழில் செய்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். அதுவும் இந்த மழைக்காலங்களில் தொழில் நடக்காது. சேறும், சகதியில் எங்களது பிள்ளைகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எங்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதி இல்லை. குடிநீர் பிடிக்க வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டும். மின்சார வசதி இல்லாததால் எங்களது பிள்ளைகள் விளக்கு வைத்தும், டார்ச் லைட் அடித்தும் படித்து வருகின்றனர். நாங்களும் அரசாங்கத்திடம் எவ்வளவோ கோரிக்கை வைத்து கேட்டு பார்த்தோம். எதுவும் செய்து கொடுக்கவில்லை. எங்களுக்கு பட்டாவுடன் இடம் கொடுத்தாலே போதும் என்று கூறினார். இல்லத்தரசி ரேவதி கூறுகையில், மழைக்காலங்களில் நாங்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். வெளியில் வர இயலவில்லை. பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவும் முடியவில்லை. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எங்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் அட்டை இல்லை. இதனால் நாங்கள் ரேஷன் வாங்க முடியாமல் கடையில் அரிசி வாங்கி சமைத்து சாப்பிடுகிறோம். நாங்கள் கரிமூட்டம் போட்டு தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். அதுவும் இந்த மழை நேரத்தில் தொழில் செய்ய முடிவதில்லை. கூலி வேலைகளும் கிடைப்பதில்லை. எங்கள் மக்களுக்கு குடியிருக்க வீட்டுமனை பட்டாவும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் எனக் கூறினார். கவிதா என்பவர் கூறும்போது, எந்த அடிப்படை வசதிகளும் இன்றி நாங்கள் சிரமப்பட்டு தான் வாழ்ந்து வருகிறோம். சாலை, போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண் கூட மருத்துவமனைக்கு நடந்து தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே, எங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்