Rock Fort Times
Online News

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (11.12.2023 ) தீர்ப்பு வழங்கியது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பின் சட்ட விதிகளை குடியரசுத் தலைவர் மத்திய அரசின் ஒப்புதலுடன் ஜம்மு காஷ்மீருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றும், மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்ததை எதிர்த்து மனுதாரர்கள் சவால் செய்யாததால் அதன் செல்லுபடியாகும் தன்மை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது மத்திய அரசால் மாற்ற முடியாத நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மனுதாரர்களின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரிக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, மாநிலம் சார்பில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்குள்ளாக்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. இதை அரசியலமைப்பு சட்டம் 1 மற்றும் 370வது பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன. அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவு தற்காலிகமானது, அதை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது. மாநிலத்தில் போர் சூழல் காரணமாக இடைக்கால ஏற்பாடாகவே அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு. ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும். ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்