திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). இவர், திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஐஸ்கேணி வீதியில் வசிப்பவர் சுபஸ்ரீ (20). புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுக்கோட்டையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சுபஸ்ரீ சென்றிருந்தார். அப்போது முத்துக்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியூர் சுற்றுலா சென்றதாகவும், இதற்காக முத்துக்குமார் சிலரிடம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த முத்துக்குமார், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலை கல்லூரி விடுதியில் இருந்த சுபஸ்ரீயிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அறைக்குள் சென்ற சுபஸ்ரீ நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த துயரத்தில் காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.