திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தியை பேச விடாமல் அவரை மெளனமாக்க நினைக்கும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவற்றை கண்டித்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுக்க இருக்கிறோம். இந்தியா கூட்டணி எஃக்கு கோட்டை போல் வலிமையாக உள்ளது. இந்தியா கூட்டணியிலிருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை. தி.மு.க, வி.சி.க குறித்து தற்போது பேசப்படும் கருத்துக்கள் குறித்து வி.சி.க தலைவர் உரிய விளக்கம் அளிப்பார். தமிழகத்தின் துணை முதல்வராவதற்கு உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் துணை முதலமைச்சராவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சை திரித்து கூறி பரப்புகிறார்கள். ராகுல் காந்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை, மலைவாழ் மக்களுக்கு அரணாக இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய மக்களின் குரலாக ராகுல் காந்தி இருக்கிறார். எதை எதையோ சிதைத்தவர்கள் தற்போது ராகுல் காந்தியின் பேச்சையும், கருத்துக்களையும் சிதைக்க
பார்க்கிறார்கள். இந்திய மக்கள் ஒரு போதும் அதை அனுமதிக்க மாட்டார்கள். சட்டம்- ஒழுங்கில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழனியில் வழங்கப்படும் பிரசாதத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக இயக்குனர் மோகன் ஜி பேசியது கற்பனைக்கு எட்டாதது என கூறினார்.

Comments are closed.