திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் காரில் சுற்றிக் கொண்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், தனிப்படையினர் விரைந்து சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை இட்டபோது அந்த காரில் 20 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அதன்பேரில், காரில் இருந்த லால்குடி தச்சங்குறிச்சியை சேர்ந்த மணிராஜ், திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் வடக்கு ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த தங்கமாயன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், கார் மற்றும் காரில் இருந்த புகையிலை பொருட்கள், ரூ.96,420 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.