Rock Fort Times
Online News

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு “ஹேப்பி நியூஸ்” : புதிய வண்ணத்தில் நவீன வசதிகளுடன் தயாராகுது விலையில்லா சைக்கிள்…!

தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் அரசின் பல்வேறு திட்டங்களில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் பள்ளி மாணாக்கர்களுக்கு ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் மற்றும் பூட்டு வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்க ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டிருந்தது. இந்த டெண்டர் செப்டம்பர் 28-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது இதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 13, 2026 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இம்முறை வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேக வண்ணங்களில் தயாரிக்கப்பட உள்ளன. அதன்படி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு கலந்த ஊதா (Lilac Mist) நிறத்திலும், மாணவர்களுக்கு ராணுவ பச்சை (Army Green) நிறத்திலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் 5.32 லட்சம் மாணாக்கர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் இந்த நவீன மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக டிசம்பர் மாதத்தில் மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்