Rock Fort Times
Online News

ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய அரசு உதவி பெறும் பள்ளி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை…!

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ஸ்ரீரங்கம் அரங்கநாயகி அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 13.11.2008ல் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பிறகு பணிமாறுதலில் திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 6வது ஊதிய குழு பரிந்துரை அமலுக்கு வருவதற்கு முன்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான 3 மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அந்த நிலுவைத்தொகை மற்றும் அவர் படித்த எம்.ஏ.படிப்பிற்கான ஊக்கத்தொகையை பெற்று வழங்க, அதே பள்ளியில் பணிபுரிந்த கிளார்க் ரெங்கராஜன் என்பவர் லஞ்சமாக ரூ.2,000 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின் பேரில் கடந்த 1-10-2009ம் ஆண்டு ஆசிரியர் மாரியப்பனிடம் இருந்து ரூ.2000 லஞ்சம் வாங்கிய ரங்கராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று இன்று( ஜூலை 30) திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார். அரசு உதவி பெறும் பள்ளி கிளார்க் ரங்கராஜனுக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேற்படி வழக்கினை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ஞா.சக்திவேல் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தனர். அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் ஆஜரானார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்