திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் சங்கமம்-2023 என்ற பெயரில் கண்காட்சி அரங்கம் இன்று ( 27.07.2023 ) நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கியதோடு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பேசினார்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வேளாண்மைதுறை ஆணையர் சுப்பிரமணியன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமய மூர்த்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மண்டல குழு தலைவர் மதிவாணன், மாநில தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், அந்தநல்லூர் தலைவர் துரைராஜ், மணிகண்டம் தலைவர் கமலம் கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறினார்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 250 உள் அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 17 மாநில அரசு துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும், 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்கத் திடல்கள், பசுமை குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் புதிய தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல்விளக்கங்கள் மற்றும் வேளாண்துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சிக்கு வருகை தரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமர கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப் பதிவுகள், மண்வள அட்டை வழங்குதல் (மண் மாதிரி மற்றும் பாசன நீர் மாதிரி எடுத்து வரும் விவசாயிகளுக்கு) ஆகிய சேவைகள் வழங்கப்படுகிறது. மேற்காணும் இடுபொருட்கள் மற்றும் சேவைகள் தேவைப்படும் விவசாயிகள் , தங்களது ஆதார் அட்டையின் நகலினை உடன் கொண்டு வந்து பெற்றுக்கொண்டனர். கண்காட்சியை காண அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவா். இந்த கண்காட்சி இன்று முதல் 29ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.