திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை சாலையை சேர்ந்தவர் பி.செல்வி (வயது 47). இவருடைய மகன் கிஷோர்குமார். இவர் பி.இ. முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை மணலியை சேர்ந்த முருகானந்தம் , லட்சுமிக்கு அறிமுகமாகி இருக்கிறார். அப்போது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் தான் வேலை செய்து வருவாதாகவும், தனக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், உங்கள் மகனுக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று செல்வியிடம் முருகானந்தம் கூறியுள்ளார். இதை நம்பிய செல்வி, முருகானந்தத்தின் வங்கி கணக்குக்கு 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முருகானந்தம், சில நாட்களில் வேலை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியுள்ளார். ஆனால் கிஷோர்குமாருக்கு வேலை வாங்கி கொடுக்காமல், சென்னை ஆவடி காமராஜர்நகர் புத்தர் தெருவை சேர்ந்த முனியாண்டியின் மகன் ஏ.எம்.பிரபு, ஒட்டியம்பாக்கம் எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தாஸ் கிருபானந்த போஸ், கொடிவளாகம் காவேரிநகரை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் முகமதுபகத் ஆகியோரை செல்விக்கு அறிமுகம் செய்து வைத்து இவர்கள் தான் அரசு வேலை வாங்கி தருவார்கள் என்று கூறியுள்ளார். அப்போது, ஏ.எம்.பிரபு தான் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவின் மருமகன் என்றும், தனக்கு அரசியல் ரீதியாக பலரிடம் பழக்கம் உள்ளதாகவும், தனியாக ஒருவருக்கு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் சிரமம் என்றும், உங்களுக்கு தெரிந்த நான்கு, ஐந்து நபர்களை அழைத்து வந்தால் சுலபமாக வேலை வாங்கி கொடுத்துவிடலாம் என்று கூறியுள்ளார். இதன்படி, செல்வி அவருக்கு தெரிந்த ஐந்து போிடம் பணம் பெற்று ஏ.எம்.பிரபு கூறிய வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக மொத்தம் 29 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும், அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செல்வி, ஏ.எம்.பிரபு குறித்து விசாரித்த போது, அவர் கூறியது அனைத்தும் பொய் என்று தெரியவந்துள்ளது. உடனே அவர்களிடம் சென்று செல்வி , தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் செல்வி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், மெட்ரோ நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக 29 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்ததாக ஏ.எம்.பிரபு, முருகானந்தம், தாஸ்கிருபானந்த போஸ், வெங்கடேஷ் மற்றும் முகமது பகத் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.