Rock Fort Times
Online News

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு: விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி நடக்கிறது…!

தமிழ் திரை உலகில் முன்னணி ஹீரோவாக உள்ளவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்,  தான் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும், மக்கள் பணியாற்றிட அரசியல் கட்சியை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  அதன்படி,  தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அண்மையில் கட்சி கொடியையும்  அறிமுகப்படுத்தினார்.  சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.
அடுத்து மாநாடு நடத்த தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக  திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெற்று வந்தநிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் அடுத்த மாதம் செப்டம்பர் 23ம் தேதி கட்சி மாநாடு நடத்த அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளனர்.  தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளநிலையில், அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்