அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகத்துறை செயலாற்றி வருகிறது. ஒரு ஊருக்கு பிரதமர் வந்தாலும் சரி, மத்திய, மாநில அமைச்சர்கள் வந்தாலும் சரி, உள்ளூர் எம்பி, எம்எல்ஏவாக இருந்தாலும் சரி அவர்களை பேட்டி எடுத்து வெளியிடுவது பத்திரிகை துறையின் சிறப்பம்சம். இதற்காக அந்தந்த பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் நிருபர்கள், வீடியோ கிராபர்கள், போட்டோகிராபர்கள் உள்ளனர். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ஆலோசனைகுழு கூட்டம் நேற்று(06-09-2024) புதிய முனைய பகுதியில் நடைபெற்றது. இதுபோன்று நடத்தப்படும் கூட்டங்களில் புகைப்படம் எடுப்பதற்கும், செய்தி சேகரிப்பதற்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கான காரணமும் தெரியவில்லை. இருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்ற திருச்சி எம்பி துரை வைகோ கூட்டம் முடிந்து வெளியே வருவார், அவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்குவார் என்று
மாலை 5 மணி முதல் 7 மணி வரை பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் கூட்டம் முடிந்ததும் விமான நிலையத்தை நீண்ட நேரம் சுற்றிப் பார்த்தாரே தவிர பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளவே இல்லை. பத்திரிகையாளர்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதை பார்த்த கட்சியினர் இன்னும் அரை மணி
நேரத்தில் எம்பி வந்துவிடுவார் என்று கூறி சமாளித்தனர். ஆனாலும், துரை வைகோ வந்த பாடில்லை. சுமார் இரண்டு மணி நேரம் பத்திரிகையாளர்களை
காக்க வைத்த துரை வைகோ கடைசிவரை பேட்டி கொடுக்கவே இல்லை. இதனால், அதிருப்தி அடைந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் புறப்பட தயாராகினர்.
அப்போது கட்சியினர் இன்னும் பத்து நிமிடத்தில் எம்பி வந்து விடுவார் என்று சொல்லி பார்த்தனர். அதை ஏற்க மறுத்த பத்திரிகையாளர்கள் காத்திருந்தது போதும் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில் பத்திரிகை யாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் இன்று காலை 11-30 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் ஹாலில் துரை வைகோ எம்பி பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்
முதல்- அமைச்சர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பத்திரிகையாளர்களை மிகவும் மதித்தவர்கள். இவ்வளவு ஏன் துரை வைகோவின் தந்தை வைகோவும், பத்திரிகையாளர்கள் மீது அதிக மதிப்பும், மரியாதையும் கொண்டவர். இவர்கள் எவ்வளவு பெரிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டுத்தான் மற்ற பணிகளை கவனிக்க செல்வார்கள். ஆனால், வளரும் இளம் தலைவரான துரை வைகோ பத்திரிகை யாளர்களை மதிக்காமல், அதுவும் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர்களை காக்க வைத்து விட்டு ஒரு “சாரி” கூட சொல்லாமல் சென்றது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது துரை வைகோ கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிக்காமல் நடந்து கொண்டது, சின்னம் தொடர்பாக பேசியது போன்ற விமர்சனங்கள் அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்திரிகையாளர்களையும் மதிக்காமல் நடந்து கொண்டது அவரது பக்குவமற்ற போக்கையை காட்டுகிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.