Rock Fort Times
Online News

உலகின் அதிக சக்தி வாய்ந்த அதிபர் பதவியை மீண்டும் தன் வசப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்…!

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பதவியாக அமெரிக்க அதிபர் பதவி உள்ளது. அங்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அந்த பதவியில் இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 81 வயதான ஜோ பைடனின் பதவிக்காலம் வருகிற ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய அதிபரை தேர்வு செய்ய இம்மாதம் நவம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர். சுமார் 16 கோடியே 50 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அமெரிக்க தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உள்ளது. இதன் மூலமும், தபால் மூலமும் ஏற்கனவே 2 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்து விட்டனர். மீதமுள்ளவர்கள் கடந்த 5-ம் தேதி வாக்களித்தனர். இந்தியாவை போல் இல்லாமல் அங்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அங்குள்ள முறைப்படி 50 மாகாணங்களில் உள்ள தேர்தல் சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 538. அதில் பாதிக்கும் அதிகமான உறுப்பினர்களை அதாவது 270 அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்களை பெறும் கட்சியை சேர்ந்தவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். இன்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில்  வெற்றிக்கு தேவையான 270 இடங்களை கடந்து டிரம்ப் 277 எலக்ட்ரோல் ஓட்டுகளையும், கமலா ஹாரிஸ் 226 ஓட்டுகளையும் பெற்றுள்ளனர். இதன்மூலம் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய டிரம்ப், இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம். இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார்.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்