தீபாவளி பண்டிகை – திருச்சியில் தரைக் கடைகள் அமைக்க 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்! மாவட்ட ஆட்சியர் தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரத்தில் தரைக் கடைகள் அமைக்க இம்மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் எம் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., திருச்சி மாநகர பகுதிகளில் 2024ம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு தரைக் கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றம் குறைகளற்ற திட்டவட்டமான ஒழுங்குமுறையுடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்ப்பட்டது போல் இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.அதன்படி டவுன்ஹால் மைதானத்தில் அ ,ஆ, இ என பகுதிகள் பிரிக்கப்பட்டு, தரைக் கடைகள் அமைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அ பகுதியில் 80 சதுர அடி கொண்ட 50 தரைக்கடைகளும், ஆ பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரைக்கடைகளும், இ பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.இக்கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும். அ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதி கட்டணம் ரூ.7500 எனவும் ஆ- பிரிவு கடைகளுக்கு ரூ.6500 எனவும், இ-பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதி கட்டணம் ரூ.5500 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தரைக் கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்த பிரிவு தரைக்கடை வேண்டுமோ, அதை தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டண தொகையை வருவாய் கோட்டாட்சியர் பெயரில் வங்கி காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.